top of page

"ஆதித்த கரிகாலன் கொலை"(வழக்கு.. வதந்திகள்.. வரலாறு..)


ஆசிரியர்: Mannar Mannan.


நான் சமீபத்தில் படித்த சிறந்த வரலாற்று ஆய்வு நூல்களில் இதுவும் ஒன்று.


நேற்றைய முன் தினம் சிவராமன் சார் என்னை அழைத்து இந்தப் புத்தகத்தை கொடுத்து உடனே படியுங்கள் என்றார்.


அவர் அப்படி சொன்னதற்கு காரணம் நான் ஆதித்த கரிகாலன் பற்றிய நாவலை தற்சமயம் எழுதிக் கொண்டிருப்பதால் தான்.

நான் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு 'சார் கிட்டத்தட்ட நாவலை முடிக்கப் போகிறேன்.


இந்த சமயத்தில் இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டுமா?" என்று கேட்டேன்.


பரவாயில்லை படியுங்கள் என்றார்.


நானும் அவரது பேச்சை மீற முடியாமல் இந்த ஆய்வு நூலைப் படித்த எனக்கு ஆச்சர்யம் அந்தப் புத்தகத்தில் காத்துக் கொண்டிருந்தது. நான் எதற்காக எந்த நோக்கத்தில் ஆதித்த கரிகாலன் நாவலை எழுதத் தொடங்கினேனோ அதே மையக்கருவை கொண்டு கரிகாலனின் கொலை பற்றி விளக்கமாக இந்த ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்தது.


அதைவிட ஆச்சர்யம் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் சோழர் காலத்தில் ஓலைச்சுவடியில் எப்படி கையொப்பம் இடுவார்கள்? அதன் வழிமுறைகள் என்ன? என்பதை ஒரு அத்தியாயத்தில் எழுதியிருக்கிறேன். நான் ஒரு அத்தியாயத்தில் எழுதியிருப்பதை இந்நூலின் ஆசிரியர் விளக்கமாக ஓலை என்றால் என்ன? அதை எப்படி எழுதுவார்கள்? எந்த மரத்தின் ஓலையைப் பயன்படுத்துவார்கள்? என்று விரிவாக அழகாக எழுதி இருக்கிறார்.


கரிகாலனின் கொலை. அதைச் சார்ந்த விஷயங்கள். சோழர்கால ஆவணங்கள் என அதிசிறந்த தகவல்களை கொண்டுள்ளது இந்தப் புத்தகம். இதற்கு முன் வரலாற்றில் கூறப்பட்டுள்ள புனைவுகள் என்ன? பொய் என்ன? என்பதைத் தெளிவாக கூறி அதனோடு உண்மை என்ன? அதை எப்படி நாம் பார்க்க வேண்டும்.


கல்வெட்டுகளை எப்படி எல்லாம் நாம் படிக்க வேண்டும்.எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதனை விளக்கி இருக்கிறார் ஆசிரியர். சக்தி ஸ்ரீ அண்ணன் அவர்களின் பார்த்திபேந்திரன் புத்தகம் என்னை வியக்க வைத்தது போல இந்த ஆய்வு நூல் என்னைப் பிரமிக்கச் செய்தது. அதீத உழைப்பால் உருவான இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம்.


இனி வரும் காலங்களில் வரலாற்று நாவல்கள் எழுதுபவர்கள் அனைவருக்கும் (என்னை உட்பட ) குறிப்பாக சோழர் காலத்தில் பயணம் செய்வோருக்கு நல்ல வழிகாட்டியாக இந்த நூல் இருக்கும்.


அருமையான புத்தகத்தை வரலாற்று உலகிற்கு அளித்த மன்னார் மன்னன் அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

- என்றும் அன்புடன் ஸ்ரீமதி



bottom of page